வங்கி ஊழியர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் 12 சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையாகும். 14-ந்தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளிலும் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கக்கூடும். பல்லாயிரக்கணக்கான காசோலை பரிமாற்றங்கள் நடைபெறாமல் பாதிப்பு ஏற்படும்.
வேலைநிறுத்தத்தையொட்டி வாடிக்கையாளர்கள் தங்களது அத்தியாவசிய வங்கி பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வேலைநிறுத்தத்தால் ஏற்படும் சேவை பாதிப்புகளைத் தவிர்க்க வங்கிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.





















