தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த நட்டார் என்ற மிக்கேல்ராஜுக்கு சொந்தமான செவுள் வலை விசைப்படகு, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து லட்சத்தீவு நோக்கி மீன்பிடிக்கப் புறப்பட்டது. அந்தப் படகில் மிக்கேல்ராஜ் உள்பட 9 மீனவர்கள் இருந்தனர்.
நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கவராத்தி தீவு கடல் பகுதியில் படகு சென்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறி கவராத்தி கடற்படையினர் படகை வழிமறித்தனர். பின்னர் விசைப்படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் சிறைபிடித்து கவராத்தி தீவுக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர் மிக்கேல்ராஜ் ஆகியோர் கடற்படையினரின் விசாரணைக்காக படகிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தருவைகுளம் பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை விரைவில் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















