பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று சட்டப்பேரவை கூடியதும் எதிர்க்கட்சியான திமுகவின் கொறடா எ.வ.வேலு பேசினார். “சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை வழக்கு மற்றும் மிசா குறித்து முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். எனவே, அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறினார்.
இதனையடுத்து பேசிய சபாநாயகர், “முதலமைச்சர் விஜய் சில ஆதாரங்களை முன்கூட்டியே காட்டினார்; இந்த அவையிலேயே சர்க்காரியா கமிஷன் பற்றி விரிவான விவாதம் நடத்தப்பட்டுள்ளது; ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைத்தான் வாசித்தார். புதிதாக எந்த செய்தியையும் சொல்லவில்லை.
மிசாவால் முன்னாள் முதலமைச்சர் கைது செய்யப்பட்டது உண்மை; அதைப் பற்றிதான் பேசினார். முரசொலி மாறன் பற்றி இங்கே குறிப்பில் உள்ள செய்தியைத்தான் பேசினார். அதேபோல், அமலாக்கத்துறை என்ன சொல்லியது என்பதைத்தான் பேசியிருக்கிறார். அதனால், அவைக் குறிப்பிலிருந்து நீக்க தேவை இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் திமுக உறுப்பினர்கள் அவரது இருக்கையை சூழ்ந்து முழக்கமிட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அவர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.





















