சென்னையின் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 25.16 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்தை சுமார் ரூ.1,200 கோடி செலவில் கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பிரதான கட்டிடம் 15 மாடிகளுடன் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்திற்கு போதிய இடவசதி இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வருகையால் வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வளாகம் அமைக்கப்பட்ட பின்னர், தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரியச் சின்னமாக பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய வளாகம் அமைப்பதற்கான அடுத்தகட்டமாக, திட்டத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடும் பணிகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















