காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கா்நாடக அரசு முற்றிலும் புறக்கணித்து அவற்றைச் செயல்படுத்தத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமா்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றவில்லை.
இன்று காலை நிலவரப்படி, கர்நாடக அணையில் 76% பயன்பாட்டுக்குரிய நீர் இருப்பு உள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கிடைக்க வேண்டிய 64 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக, தமிழ்நாடு 14 டிஎம்சி நீரை மட்டுமே பெற்றுள்ளது. விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாடு 55.29% நீரைப் பெற்றிருக்க வேண்டும். இதனால் சுமார் 20 டிஎம்சி நீர் நிலுவையில் இருக்கிறது” என்று வாதத்தை முன்வைத்தார்.
கர்நாடகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்ததுடன், காவிரிப் படுகைப் பகுதியில் மாநிலம் ”மிகக் கடுமையான நெருக்கடியை” எதிர்கொண்டு வருவதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு தண்ணீர் திறக்காதது ஏன்? இயற்கை கொடுத்த மழை நீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்ற காரணத்தால் திறந்துவிடப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடைபட்ட காலத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.





















