தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி அறிவித்துள்ளார். ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் மேலும் சட்டமன்றப் பேரவையில் பேசியதாவது; “தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி” உலகில் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால், அது விவசாயத் தொழில் மட்டுமே.
உலகின் ஒரு மூலையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குகிறதோ, அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
5,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும், 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75,000 ரூபாய் வரையும், 1,00,000 ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35,000 ரூபாய் வரையும் தள்ளுபடி வழங்கப்படும்.
இதன்மூலம், 75,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்குத் தலா 75,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ஏற்கனவே, பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக 40,000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும், இருந்தாலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 இலட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது” தெரிவித்துள்ளார்.





















