தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் முதலில் பாட வேண்டும் என்ற முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு
தமிழ் என்றால் கெத்து
இந்தியாவின் நெற்றியில் வைக்கக்கூடிய வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து; தமிழ் என்றால் அது தனி பவர். ஒரு பெயரே, ஒரு சொல்லே மிகப்பெரிய வரலாறுன்னா அது தமிழ்தான். தமிழ் மொழி என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல; நம் உயிர்; பேசினால் ஓசை மட்டும் இல்லை, உணர்வும் வரும்; நம் தாய்மொழி குறித்த உணர்வை புரியவைக்க தாய் மொழி, தமிழ் மொழி என்று சொல்வதே போதும்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. உணர்வோடு கலந்திருக்கக்கூடிய தமிழை பின்னுக்குத் தள்ளினால் எப்படி பொறுத்துக்கொள்வது?; தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்; அது நம் உரிமை. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.





















