சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலைகளை முறையாகப் பராமரிக்காதது தொடர்பான புகாரில், பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர், சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட சாலைகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் சம்பந்தப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
2021 மார்ச் முதல் 2025 ஏப்ரல் வரை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி வருவாய் வசூலிக்கப்பட்டிருந்தும், சாலை பாதுகாப்பாகவும் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று ஆணையம் குறிப்பிட்டது.
இதையடுத்து பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து, அந்தத் தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதிக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.15 ஆயிரம் வழக்குச் செலவு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆய்வில் கண்டறியப்பட்ட சாலை குறைபாடுகளை 2 மாதங்களுக்குள் சரிசெய்யவும், விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் தேவையான எச்சரிக்கை மற்றும் வழிகாட்டிப் பலகைகளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





















