தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 52 முக்கிய கோயில்களில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பு வைப்பறைகளில் ஒப்படைத்துவிட்டு தரிசனத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் செல்போன்களை ஒப்படைப்பதற்கும், மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அவசரத் தேவைகளுக்குத் தொடர்புகொள்ள முடியாமல் பக்தர்கள் சிரமங்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு செல்போன் தடையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்:
- கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்லலாம்.
- கோயில் வளாகத்திற்குள் செல்போன்களை கட்டாயம் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.
- சுவாமி சிலைகள் மற்றும் பூஜைகளைப் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி இல்லை.
- செல்ஃபி எடுப்பதற்கும் சமூக வலைதளங்களுக்காக வீடியோ பதிவு செய்வதற்கும் தடை தொடரும்.
- விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





















