சென்னையில் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும் புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.234 கோடி செலவில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று (ஆகஸ்ட் 25) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இவை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இரண்டாம் கட்ட மின்சாரப் பேருந்து திட்டத்தின் ஒரு பகுதியாகும். இரண்டாம் கட்டமாக மொத்தம் 750 புதிய தாழ்தள ஏசி மின்சாரப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் ஆலந்தூர், சென்ட்ரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏசி மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகள் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைப்பதுடன், சென்னையில் பொதுமக்களுக்கு நவீன மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை வியாசர்பாடி, பெரம்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய மின்சாரப் பேருந்துகளின் வருகையால் சென்னையின் பொதுப் போக்குவரத்து மேலும் நவீனமயமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















