தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க.அருண்ராஜ், அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முறை சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறது. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆகியோரின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இத்தேர்வு முறை பெரிதும் பாதிக்கிறது.
தொடர் வினாத்தாள் கசிவுகள் மற்றும் முறைகேடுகளால் நீட் (இளநிலை) 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்களுக்குச் சொல்லொணாத் துயரமும், இளம் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துள்ளது. எனவே, இத்தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.
நீட் தேர்வுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, நீட் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 30/2019), 2020-ம் ஆண்டு இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டம் (மையச் சட்டம் 14/2020) 2020-ம் ஆண்டு ஹோமியோபதிக்கான தேசிய ஆணையச் சட்டம், (மையச் சட்டம் 15/2020) மற்றும் தொடர்புடைய பிற மையச் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.





















