வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில், புகாரை விசாரிக்க வேண்டிய காவல்துறை, செய்திகளை நீக்குமாறு வலியுறுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “அரசுப் பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதனை விசாரிப்பதை விட்டுவிட்டு செய்தியை ‘False News’ என்று கூறுவது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் ஊடகங்களை மிரட்டுவதாக அரசை விமர்சித்த பழனிசாமி, வண்டலூர் அரசுப் பள்ளி மாணவி தொடர்பான புகாரில் முழுமையான விசாரணை நடத்தி, குற்றத்தில் தொடர்புடையவர்கள் இருப்பது உறுதியானால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





















