திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, கடலில் புனித நீராடிய பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, மறுநாட்களில் காலை நேரத்தில் கடல் உள்வாங்கி, மாலையில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை திருச்செந்தூர் கடல் திடீரென சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கியது.
இதனால் கடல் நீர் விலகிய பகுதிகளில் பாசி படர்ந்த பாறைகள் வெளிப்பட்டன. கடல் உள்வாங்கிய நிலையிலும் பக்தர்கள் பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















