வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதியையொட்டி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் கூடுதல் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 890 சிறப்பு பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 820 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி பயணத்தை திட்டமிடும் பொதுமக்கள், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





















