தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (செப்.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கி.மீ. உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. மேலும், மராத்வாடாவிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை உள் கர்நாடகம் மற்றும் கேரளம் வழியாக சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாடு, திருச்சி மாவட்டம் கல்லக்குடி மற்றும் மால்வாய், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, அரியலூர் மாவட்டம் மேலக்கருப்பூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.





















