தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (அக்டோபர் 21) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 821 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகியவற்றுக்குச் சென்று, ஒருமுறை பதிவு (OTR Dashboard) பகுதியில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டில் தேர்வரின் பெயர், தேர்வு மையம், முகவரி, தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றைச் சரிபார்த்து, தேர்வு நாளன்று ஹால் டிக்கெட் மற்றும் தேவையான அடையாள ஆவணங்களுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் எனத் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.




















