தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அக்டோபர் 2ஆம் தேதி முதல் மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தற்போது சாதாரண பேருந்துகளில் நடைமுறையில் உள்ள இலவச பயணத் திட்டம், இனி கூடுதல் பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்பட உள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்படும். திட்டத்தின் கீழ் வருமான வரம்பு அல்லது பயணங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுடன் திருநங்கைகளும் இந்த இலவச பேருந்து பயண வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணிக்கும் பெண்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















