சென்னை
காங்கிரசும், பா.ஜ.க.வும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும், இருவரது உடலிலும் இருப்பது ஒரே ‘ஜீன்’தான் என்றும், ‘நீட்’ தேர்வை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பேசினார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. உறுப்பினர் போஜராஜன் பேசுகையில், “காங்கிரஸ் உறுப்பினர் பேசும்போது, அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது என்று கூறியதற்கு நன்றி.’நீட்’ தேர்வை பா.ஜ.க. அரசு மாற்றியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும்போது, எங்களால் அதை மாற்ற முடியாது” என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் கேள்வி
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம். எல்.ஏ. தாரகை கத்பர்ட் பேசுகையில், “காங்கிரஸ் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திருத்தும்போது, ‘நீட்’ தேர்வை திருத்துவதற்கு மட்டும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
சி.வி.சண்முகம் காட்டம்
இதையடுத்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:
“பா.ஜ.கவும், காங்கிரசும் வேறு வேறு கட்சிகளாக இருந்தாலும், அவர்களது உடலில் இருப்பது ஒரே ‘ஜீன்’தான். ‘நீட்’ தேர்வை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் ‘நீட்’ தேர்வை தொடர்கிறோம் என்று பா.ஜ.க. கூறுகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அந்த தீர்ப்பை செல்லாததாக ஆக்க முடியாதா?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்ததற்கு முன்னுதாரணம் உள்ளது.ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பெற்ற பிறகு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
அந்த வழக்கில் ஜீவனாம்சம் வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிறகு ராஜீவ்காந்தி தலைமை யிலான அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, அந்த தீர்ப்பை செல்லாததாக மாற்றியது. அதுபோல ‘நீட்’ தேர்வு விவகாரத்திலும் செய்ய முடியும். மாணவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்
காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் உண்மையிலேயே ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால், எப்போதோ அதை ரத்து செய்திருப்பார்கள். மாணவர்களை காப்பாற்றியிருப்பார்கள். ஆனால், ‘நீட்’ தேர்வை வைத்துக்கொண்டு இரு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றன. மாணவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார்.





















