தமிழகத்தின் தலைநகரான சென்னை இன்று தனது 387-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசப்பட்டினம் பகுதியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. இதனை நினைவுகூரும் வகையில் சென்னை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மதராசப்பட்டினமாக தொடங்கி, இன்று இந்தியாவின் முக்கியமான பெருநகரங்களில் ஒன்றாக சென்னை வளர்ந்துள்ளது. கல்வி, தொழில், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சினிமா, விளையாட்டு மற்றும் கலாசாரம் என பல்வேறு துறைகளில் சென்னை முக்கிய பங்கு வகித்து வருகிறது.





















