சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக இன்று (செப்.24) தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையோ அரசு அறிவிப்போ இதுவரை வெளியாகவில்லை.
பட்டினப்பாக்கத்தில் சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில், 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு, செப்டம்பர் 8-ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது.
இந்தத் திட்டத்தால் தங்களது மீன்பிடித் தொழில், படகுகளை நிறுத்தும் இடம், வலைகளை உலர்த்தும் பகுதிகள் உள்ளிட்ட பாரம்பரிய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல அரசியல் கட்சிகளும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய பொதுத்துறை செயலருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், புதிய தலைமைச் செயலகத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை பல்லவன் இல்லம் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தில் நிர்வாகக் கட்டிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





















