புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், மிரட்டல் புரளி என தெரியவந்தது.
தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் தலைமைச் செயலக வளாகம் மற்றும் அலுவலகப் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார், சென்னையைச் சேர்ந்த சேஷஷைலாஷன் (40) என்பவரை கைது செய்தனர். மிரட்டலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





















