பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படும் எனவும், அதற்கு பதிலாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஐந்தாவது பயணிகள் முனையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் புதிய இடம் தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய விமான நிலையம் அமைப்பதற்காக சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு இறுதி இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 பணிகள் நிறைவடைந்ததும், கூடுதல் பயணிகள் வசதிக்காக புதிய டெர்மினல் 5 அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















