சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னை விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் ஏற்கெனவே தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதேபோன்ற முறையை சென்னையிலும் அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் சரக்குக் கையாளும் திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், விமான நிலையத்தின் தற்போதைய நிர்வாக முறையை மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொது–தனியார் பங்களிப்பு (PPP) முறையின் கீழ் விமான நிலையத்தின் தினசரி நிர்வாகம், பராமரிப்பு, வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படலாம்.
ஆனால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கியச் சேவைகள் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
2025–26 நிதியாண்டில் சென்னை விமான நிலையம் சுமார் 2.30 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளது. புதிய முனையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும் திறனை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையுடன் கொல்கத்தா விமான நிலையத்தையும் தனியார் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இருப்பினும், சென்னை விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எந்த நிறுவனத்திடம் நிர்வாகம் ஒப்படைக்கப்படும், ஒப்பந்தக் காலம் எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்கள் பின்னரே தெரியவரும்.
இதனால், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தில் விரைவில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




















