மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடிக்குக் கீழே சரிந்துள்ளதால், பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் நீரில் மூழ்கியிருந்த பழமையான ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, அப்பகுதியில் இருந்த பழமையான கோயில்கள் மற்றும் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அவற்றில் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலையும் ஒன்றாகும்.
அணையின் நீர்மட்டம் குறையும்போது நந்தி சிலை வெளியே தெரிவது வழக்கம். தற்போது நீர்மட்டம் 60 அடிக்குக் கீழே சரிந்துள்ளதால், நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரிகிறது.
இதனால் பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள பழமையான நந்தி சிலையைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைப்பது குறித்து விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.





















