காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி மண்டலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து, நிவாரண உதவிகளை வழங்குவதுடன், விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பதிவில், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் சம்பா மற்றும் தாளடி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி நீரைப் பெற்றுத்தர தமிழக அரசு தவறிவிட்டதாகவும், சொந்த செலவில் பம்புசெட்டுகள் அமைத்து நிலத்தடி நீர் மூலம் விவசாயம் மேற்கொண்டவர்களுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுவதாக உறுதியளித்த முதலமைச்சர் விஜய், தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.





















