தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரை டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் எடுத்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, சிஜேபி அமைப்பு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்லி சவுத் அவென்யூ பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அக்கட்சியின் எம்.பி.க்களான டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களை டெல்லி போலீசார் தடுப்புக் காவலில் எடுத்தனர்.
இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது வீட்டிலிருந்து ஜந்தர் மந்தர் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றார். அப்போது அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
மேலும், கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















