தமிழக அரசின் முக்கிய நிர்வாக மையமான சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டிடத்தில் முதல் தளம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் அலுவலக அறைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அலுவலகப் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
மின்வெட்டு காரணமாக அமைச்சர்களின் அறைகள் இருளில் மூழ்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மின்வெட்டு பிரச்சினை நிலவி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், தலைமைச் செயலகத்திலேயே மின்தடை ஏற்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மின் விநியோகம் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















