ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணிப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
திலோத்தமா சென், விதர்சா கே. வினோத், ஆஷி சோக்சி ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,763 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 1,773 புள்ளிகளுடன் சீனா தங்கப் பதக்கத்தையும், 1,754 புள்ளிகளுடன் கஜகஸ்தான் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. சீனாவின் 1,773 புள்ளிகள் ஆசிய விளையாட்டு சாதனையாகவும் அமைந்தது.
இந்திய வீராங்கனைகளில் திலோத்தமா சென் 590 புள்ளிகளுடன் சிறப்பாக செயல்பட்டார். விதர்சா வினோத் 588 புள்ளிகளையும், ஆஷி சோக்சி 585 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம் அணிப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியானது.





















