தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று இரவு கடல் திடீரென சுமார் 150 அடி தூரம் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் அருகே உள்ள நாழிக்கிணறு பகுதியில் இருந்து சந்தோஷ மண்டபம் வரை கடல் நீர் சுமார் 150 அடி பின்னோக்கிச் சென்றது. இதனால் வழக்கமாக கடலுக்குள் மூழ்கியிருக்கும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெளிவாகத் தெரிந்தன.
மேலும், கடல் உள்வாங்கியபோது கடலில் இருந்த பெண் சுவாமி சிலையின் தலைப்பகுதி வெளியே தெரிந்ததாகவும், அதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டெடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களை ஒட்டி கடல் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பும் கடல் சுமார் 90 முதல் 100 அடி வரை உள்வாங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த முறை கடல் உள்வாங்கியிருந்தபோதிலும், பக்தர்கள் வழக்கமாக புனித நீராடும் பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. இதனால் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடினர். இன்று காலை கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















