சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி கடந்த 24 மணி நேரத்தில் 301 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நடப்பாண்டில் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகி வருவதால், கள கண்காணிப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது





















