கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுக அரசு செய்த ஒரே சாதனை 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஊழல்தான் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூரில் நடைபெற்ற 48-வது வார திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அவலங்களை எடுத்துரைத்தார்.
திமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை
எடப்பாடியார் முதல்வராக இருந்த காலத்தில் 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இப்போது முதல்வராக இருந்தும் திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
திமுக வழங்கும் பொங்கல் பரிசு கட்சி நிதி அல்ல, அது மக்களின் வரிப்பணம் என்றும், திமுக கட்சியினர் தங்களது சொந்த பணம்போல் வழங்கி நாடகம் நடத்துவதாகவும் கூறினார்.
தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது
இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதன் விளைவாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், மின்சாரம், டாஸ்மாக், பத்திரப் பதிவு, நெடுஞ்சாலை, சுகாதாரம், பள்ளிக் கல்வி உள்ளிட்ட துறைகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
2027ல் எடப்பாடியார் முதல்வர்
2027 ஆம் ஆண்டு தை திருநாளில் எடப்பாடியார் முதல்வராக பதவியேற்று ரூ.5000 பொங்கல் பரிசு வழங்குவார் என்றும், அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவார் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
“மக்களின் பேராதரவுடன் எடப்பாடியார் மீண்டும் முதல்வர் அரியணையில் அமர்வார். திமுக அரசின் ஊழல்களுக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்”
— ஆர்.பி.உதயகுமார்













