தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 21) திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: அக்டோபர் 22ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















