தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த ஜந்தர் மந்தர் பகுதி, அதிகாரப்பூர்வ போராட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த சிறப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் வெளியிட்டுள்ளார்.
ஜந்தர் மந்தருக்குப் பதிலாக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான புதிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த இடங்களில் போராட்டங்களை நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முக்கிய போராட்டங்களின் மையமாக ஜந்தர் மந்தர் விளங்கி வந்தது. குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிரான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் இங்கு போராட்டங்களை நடத்தி வந்தன.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் டெல்லியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், ஜந்தர் மந்தர் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.





















