சென்னை மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, ரயில் சேவை தொடங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக மாற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி இடையேயான மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அதிகாலையிலேயே பணிக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக காலை 6 மணிக்கே சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றத்தின் மூலம் காலை நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சேவை நேர விவரங்கள்:
- அமலுக்கு வரும் நாள்: அக்டோபர் 23, வெள்ளிக்கிழமை
- முதல் ரயில்: காலை 6 மணி
- கடைசி ரயில்: இரவு 9 மணி
- வழித்தட தூரம்: 15 கிலோ மீட்டர்
- மெட்ரோ நிலையங்கள்: 11
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களிலும் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் இரவு 9 மணிக்குப் புறப்படும். மாற்றியமைக்கப்பட்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.













