சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி–வடபழனி வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் சேவைகளை மேற்கொள்ள 30 மெட்ரோ ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் டி.அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
புதிய வழித்தடம் சுமார் 14.6 கி.மீ. நீளம் கொண்டது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக வடபழனியை இணைக்கும் இந்தப் பாதையில் மெட்ரோ சேவைகள் தொடங்குவது, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தின் முதல் முக்கிய செயல்பாட்டு பகுதியாக அமைகிறது.
தொடக்கத்தில் மெட்ரோ ரயில்கள் 10 நிமிட இடைவெளியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 15 ரயில்கள் போதுமானதாக இருக்கும் நிலையில், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் சேவைகளை இயக்க வசதியாக மொத்தம் 30 ரயில்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலிலும் அதிகபட்சமாக சுமார் 900 பயணிகள் பயணிக்க முடியும்.
அக்டோபர் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியின்போது பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரயில்கள் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் ரயில் ஆபரேட்டர்களின் கண்காணிப்புடன் இயக்கப்படும். முழுமையான ஓட்டுநர் இல்லா சேவை 2027 நடுப்பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.





















