தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கேவை விமானத்திலேயே டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் அக்டோபர் 10-ஆம் தேதி போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்த அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்டோரை விமானத்திற்குள்ளேயே நுழைந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, “நான் கைதாகவே இங்கு வந்துள்ளேன். என்னைக் கைது செய்யுங்கள். நாங்கள் பயப்படவில்லை” என்று அபிஜீத் தீப்கே காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதற்கு, இது கைது நடவடிக்கை அல்ல என்றும் ஒத்துழைக்குமாறும் காவல்துறையினர் கூறியதாக வெளியாகியுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், முறையான முன்அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. போராட்டத்தில் பங்கேற்க முயன்ற ஏராளமான இளைஞர்கள் மற்றும் சிஜேபி ஆதரவாளர்களும் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் அபிஜீத் தீப்கே தடுத்து நிறுத்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சிஜேபி, தடுத்து வைக்கப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.





















