தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை வழங்கும் வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த நிலையில், பருவமழை தொடங்குவதற்கான சாதகமான வானிலைச் சூழல் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து முழுமையாக விலகுவதற்கான சூழல் உருவாகி வரும் நிலையில், அக்டோபர் 15 அல்லது 16ஆம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும், பருவமழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் பல மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் வடகிழக்குப் பருவமழை, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, மழை பெய்யும் நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இடி மின்னலின்போது மரங்களின் அடியில் நிற்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















