தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. வார்டு மறுவரையறை, உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு மற்றும் இடஒதுக்கீடு பணிகள் நிறைவடையாததால், 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 19ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து, இந்த 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி நிர்வாகத்தைக் கவனிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 28 மாவட்டங்களில் பணியாற்றும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலமும் 2027 ஏப்ரல் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், 46 ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது, புதிய வார்டுகளை வரையறுப்பது மற்றும் இடஒதுக்கீடுகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகள், இடைத்தேர்தல்கள் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின்னரே உறுதியான தேதி தெரியவரும்.




















