தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்குவதற்கான ஒப்பந்த ஒதுக்கீட்டு உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் பாமாயில் விநியோகிக்க அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய கடந்த ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.
இதில் நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டன. முதற்கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை அக்டோபர் 29ஆம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், பாமாயில் பாக்கெட்டுகளை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறையான விகிதாசாரம் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, கேடிவி ஹெல்த் ஃபுட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு விவரங்களையும் பரிசீலித்த நீதிபதி, செப்டம்பர் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பாமாயில் விநியோக ஒதுக்கீட்டு உத்தரவுக்கு நவம்பர் 2ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தார். மேலும், வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட பாமாயில் கொள்முதல் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.





















