தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் நிலையில், அக்டோபர் 8 முதல் 10-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அக்டோபர் 7 எச்சரிக்கையிலும் 8, 9, 10 தேதிகளுக்கு கனமழை எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது.
அக்டோபர் 8: கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 9: நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 10: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.





















