தெலுங்கு-–தமிழ் மொழிகளை இணைக்கும் புதிய ‘தெலுமிழ்’ திரைப்படமாக உருவாகிறது ‘கோல்டன் பாக்கியம்’. ‘ரங்கபலி’ புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு மற்றும் சத்யா இணைந்து நடிக்கின்றனர்.

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி தயாரிக்கும் இப்படம், ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு நிறுவனங்களின் முதல் தயாரிப்பாக உருவாகிறது. இதன் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
தெலுங்கரும் தமிழரும் தங்களுக்குப் பிடித்த உணவுகளை ரசித்தபடி, எது சிறந்தது என வாக்குவாதம் செய்வதுடன் கிளிம்ப்ஸ் தொடங்குகிறது. தொடர்ந்து யோகி பாபு–சத்யா அறிமுகமாக, காதல், க்ரைம், ஆக்ஷன் கலந்த கதையாக படம் உருவாகியிருப்பது தெரியவருகிறது.
மேலும், சத்யா தமிழிலும், யோகி பாபு தெலுங்கிலும் பேசுவது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருவரின் காமெடி கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட முழுமையான என்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருவதாக கிளிம்ப்ஸ் உணர்த்துகிறது.
ஜெயஸ்ரீ, அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வென்னேல கிஷோர், சுதர்சன், ரோகிணி, தனிகெள்ளா பரணி, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்ய, பவன் சி.எச். மற்றும் நிதிஷ் ஜான் இசையமைக்கின்றனர். ரவி தேஜா கிரிஜாலா எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.
முதலில் சங்கராந்தி வெளியீடு என அறிவிக்கப்பட்ட இப்படம், தற்போது இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





















