தமிழகத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டைப் போக்குவதற்காக, வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தைச் சராசரியாக ரூ.35 விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைச் சமாளிக்க தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியிருந்தது.
அதன்படி, அக்டோபர் 12 முதல் 31ஆம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 3,000 மெகாவாட்டும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை 1,500 மெகாவாட்டும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெளிச்சந்தையில் மின்சாரக் கொள்முதல் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.31.99 முதல் ரூ.37 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சராசரியாக ரூ.35 விலையில் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் மின்வாரியத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேவேளையில், இந்த நடவடிக்கையின் மூலம் மின்வெட்டு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.





















