பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு
அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டோன்ட் டிரபிள் தி டிரபுள்’. எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் அக்டோபர் 2-ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழகத்தில் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.
படத்தின் வெளியீட்டையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்ட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், எஸ்.எஸ். ராஜமௌலியின் படைப்பில் வெளியாகும் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமை என்றார். டீசர் மற்றும் டிரெய்லர் வெளியான பிறகு, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா பேசுகையில், இது தங்களது நிறுவனத்தின் முதல் திரைப்படம் என்றும், நேர்மையான மற்றும் இனிமையான படமாக உருவாகியுள்ளதாகவும் கூறினார். குறிப்பாக இரண்டாம் பாதியில் இடம்பெறும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களை கவரும் என்றார்.
குழந்தை நட்சத்திரம் சாரா பேசும்போது, தான் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், படத்தில் ரசிகர்களை ஒரு மாயாஜால உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் சாகசங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பேசுகையில், “ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை” என்ற ஒற்றை வரி கதையை கேட்டவுடனேயே தனக்கு பிடித்துவிட்டதாக கூறினார். ஃபஹத் பாசில் சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளதாகவும், முதல் பிரதியை பார்த்தபோது சிரித்தும் அழுதும் ரசித்ததாகவும் தெரிவித்தார். சாராவும் சிறப்பாக நடித்துள்ளதாக அவர் பாராட்டினார்.

நடிகர் ஃபஹத் பாசில் பேசுகையில், இதுவரை தான் கேட்டிராத, நடித்திராத வித்தியாசமான கதைக்களம் என்பதால் உடனடியாக படத்தில் நடிக்க சம்மதித்ததாக கூறினார். சுமார் 100 முதல் 120 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், சாராவுடன் இணைந்து அற்புதமான அனுபவத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் படம் ரசிகர்களை சிரிக்கவும், அழவும் வைக்கும் அழகான படமாக இருக்கும் என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, ஃபஹத் பாசில்-–ராஜமௌலி–-கார்த்திகேயா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த வித்தியாசமான திரைப்படம் மீது தனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, “ஒரு பேயை கடத்திவிட்டால் என்ன ஆகும்?” என்ற புதுமையான கதைக்களம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றார்.
மேலும், ஃபஹத் பாசில் வழக்கமான கதாநாயக பிம்பத்துக்குள் சிக்காமல், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்து நடிப்பவர் என்று சூர்யா பாராட்டினார். குழந்தை நட்சத்திரம் சாராவும் படத்தின் உலகத்தை உயிரோட்டமாக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் அனைத்து விதமான உணர்வுகளும் இடம்பெற்றுள்ள இப்படம், அக்டோபர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து இந்த மாயாஜால அனுபவத்தை ரசிக்குமாறு படக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.





















