தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ஜனவரி 1 முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை டெங்கு காய்ச்சலால் 21,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.சென்னையில் மட்டும் 3,700 பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் கூறினார
வீடுகள், கட்டுமானப் பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால் முதல்முறையாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் விதிமீறல் கண்டறியப்பட்டால் கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டார்.





















