தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து மற்றும் கடன் விவரங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள், சேமிப்புகள், கடன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
என்னென்ன விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்?
அரசு ஊழியர்கள் தங்களது வீடுகள், நிலங்கள், கட்டிடங்கள், தங்க நகைகள், கார், இருசக்கர வாகனங்கள், வங்கிச் சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், வேறு நபர்களின் பெயரில் சொத்துகள் வாங்கியிருந்தாலும், அந்தச் சொத்துகள் குறித்த விவரங்களையும் சம்பந்தப்பட்ட நபருக்கும் அரசு ஊழியருக்கும் உள்ள உறவுமுறையையும் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடவடிக்கை?
அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கும் அரசு ஊழியர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான பட்டியலில் பரிசீலிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விவரங்களைத் தாக்கல் செய்யாதது அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதிகளை மீறிய செயலாகக் கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2010ஆம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்த மூன்று மாதங்களுக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவும், அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது சொத்து விவரங்களை இணையவழியில் தாக்கல் செய்வதைப் பதவி உயர்வுக்கான பரிசீலனையுடன் இணைத்திருப்பது அரசு ஊழியர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது





















