எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.24) தள்ளுபடி செய்தது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. சுதன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே அரசியல் காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. மேலும், அவர்களிடமிருந்து இடைத்தேர்தல் நடத்துவதற்கான செலவை வசூலிக்கும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அத்துடன், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கேட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது அல்லது இடைத்தேர்தல் செலவை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிப்பது போன்றவற்றுக்கு தற்போதைய சட்டத்தில் உரிய ஏற்பாடு இல்லை என்றும், இதுபோன்ற மாற்றங்களை சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதன் மூலமே கொண்டுவர முடியும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன் மூலம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.





















