40 மணி நேரத் தேடுதல் வேட்டை நிறைவு – ட்ரோன் மூலம் கண்காணித்து போலீசார் அதிரடி!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு தப்பியோடிய 17 விசாரணைக் கைதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதிகளில் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சிறைக் காவலர்களை அறைக்குள் வரவழைத்ததாகவும், பின்னர் காவலர்களைத் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த சாவியைப் பறித்து 17 பேரும் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்டங்களாக 15 பேர் பிடிபட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சகோதரர்கள் திருப்பதி, மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் போலீசாரிடம் சிக்கினர்.
இதன் மூலம் தப்பியோடிய 17 பேரும் சுமார் 40 மணி நேரத்திற்குள் மீண்டும் போலீசாரின் பிடியில் கொண்டுவரப்பட்டனர். மேலும், கைதிகளைப் பல்வேறு மத்திய சிறைகளுக்கு மாற்றவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.





















