வீட்டு உபயோக LPG சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (BAA/e-KYC) இன்றைக்குள் (செப்டம்பர் 30) முடிக்க வேண்டும். அக்டோபர் 1, 2026 முதல் மானியத்துடன் கூடிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் LPG ரீஃபில் பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் அவசியம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.
e-KYC முடிக்காததால் கேஸ் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படாது. ஆனால் மானியத்துடன் கூடிய நிர்ணயிக்கப்பட்ட விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்ய, முதலில் ஆதார் அங்கீகாரத்தை முடிக்க வேண்டியிருக்கும். e-KYC செய்ய விரும்பாத அல்லது செய்ய இயலாத வாடிக்கையாளர்கள் எண்ணெய் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளில் அதைப் பதிவு செய்து, மானியம் இல்லாமல் சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்களைப் பெறலாம்;
ஏற்கனவே பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடித்தவர்கள் மீண்டும் e-KYC செய்யத் தேவையில்லை. செப்டம்பர் 19 நிலவரப்படி நாட்டில் 27.43 கோடி வீட்டு LPG வாடிக்கையாளர்கள், அதாவது 89.9 சதவீதம் பேர், இந்த அங்கீகாரத்தை முடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர் மூலமாகவோ, தங்களது LPG விநியோகஸ்தர் அலுவலகத்திற்குச் சென்றோ பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்கலாம். மேலும் Indane வாடிக்கையாளர்கள் IndianOil ONE, Bharatgas வாடிக்கையாளர்கள் HelloBPCL, HP Gas வாடிக்கையாளர்கள் HP PAY செயலிகள் மூலமாக வீட்டிலிருந்தே செயல்முறையை மேற்கொள்ளலாம்.
போலி அல்லது தகுதியற்ற LPG இணைப்புகளை கண்டறிவது, வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டுக்கு திசைதிருப்பப்படுவதைத் தடுப்பது மற்றும் மானியம் தகுதியான பயனாளர்களை சென்றடைவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.





















