கோவை: வால்பாறை அருகே அப்பர்பாரளை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில், வீட்டிற்கு வெளியே இருந்த 5 வயது சிறுவன் தீட்சிதனை சிறுத்தை தாக்கி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் அப்பகுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.
புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வெளியே வந்து சிறுவனைத் தாக்கி, தலையில் கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட தாய் நாகஜோதி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்களும் உதவிக்கு வந்தனர். இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு புதருக்குள் தப்பியது.
தலையில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவப் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். குழந்தைகளை தனியாக வெளியே விட வேண்டாம் என்றும், குடியிருப்புகளைச் சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















