வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, வரும் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு சாதகமான முடிவை அறிவித்தால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வேலைநிறுத்தத்திற்கு முன்பாக வார இறுதி விடுமுறையும் வருவதால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 30-ம் தேதி அரையாண்டு கணக்கு முடிப்பு நாள் என்பதால் பணப்பரிவர்த்தனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.
ஓய்வூதியம் புதுப்பித்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. வேலைநிறுத்தம் நடைபெற்றால் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகளை பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.





















